தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு நடிகர் தனுஷ் பல வாய்ப்புக்கைளை வழங்கியுள்ளார்.
அவர்களில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது.
இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களிலும் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்தனர்.
அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் “ நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்” என பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக ‘மதராஸி’ அமேசான் ஓ.டி.டி. தளத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒக்டோபர் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே தினத்தில் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ வெளியாக உள்ளது.
இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா? என்ற கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.