யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக, உடல் பாகத்தினுள் மறைத்து, தங்கத்தைக் கடத்திய பெண் காங்கேசன்துறை சுங்கத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை இந்தியாவிலிருந்து, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக, குறித்த பெண் 300 கிராமிற்கு அதிகமான நிறையுடைய தங்கத்தைத் தனது உடல் பாகத்தினுள் மறைத்துக் கொண்டு வந்தமை, பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மாலை சத்திர சிகிச்சையின் பின் அவரது உடலிலிருந்து தங்கம் வெளியே எடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
கொழும்பைச் சேர்ந்த 41 வயதுடைய குறித்த பெண்ணின் மீது, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காங்கேசன்துறை சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
