எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தின்போது மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வொன்று வெல்லவாயவில் நடைபெற்றது.
பேருந்து கவிழ்ந்தவுடனேயே முதலில் ஏறி காயமடைந்தவர்களை மீட்டவர், இராணுவ விசேட அதிரடிப் படையின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.வி.எம்.பண்டார என்பவராவார்.
இதன்போது இந் நிகழ்வில் குறித்த வீரருக்கு நினைவுச் சின்னமும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்தப் பாராட்டு நிகழ்வானது, வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இராணுவ வீரரின் தாய், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி, வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ.நிஹால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர்.
இதன்போது பேருந்திலிருந்த குழுவை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், அவர்களில் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எம்.வி.எம்.பண்டாரவும் அடங்குவார்.
இந்நிலையில் தற்போது அவர் ஓரளவு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
