பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது.இக்குழு இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.
கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியதுடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது.
இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பாக பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
