மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இராசமாணிக்கம் சாணக்கியன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் என்னிடம் தெரிவித்தார்.
ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் கேட்ட போது இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார்.
மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.
மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


