முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள்
இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற நிலையில் மக்கள் மற்றும் காணியின் உரிமையாளர்கள் எதிர்பினை தெரிவித்தமையினால் காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி உரிமையாளர்களுக்கு காணி சுவீகரிப்பு தொடர்பிலான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிலாவத்தை கிராம அலுவலகர் ஆளுகைக்கு உட்பட்டபகுதியில் இலங்கை கடற்படைத்தளம் அமைந்திருக்கும் காணியானது காணி கையகப்படுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460 இன் 5ஆவது பிரிவின் கீழ் இன்று நிலஅளவை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நில அளவையாளர் கி.கிருஸ்ணராசா அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள்,அரச நிலஅளவையாளர் கி.கிருஸ்ணராசா ,சிலாவத்தை கிராம சேவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்த போது காணியின் உரிமையாளர்கள் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பு நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.