திருகோணமலை – புல்மோட்டை 2 – பொன்மலைக்குடா பகுதியில் உள்ள காணியொன்றில் ஜனாஸாவொன்றை நல்லடக்கம் செய்வதனை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் அங்குப் பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொன்மலைக்குடா பகுதியில் ஆண் ஒருவர் சுகவீனமுற்று மரணமான நிலையில், மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் அவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கு இன்று காலை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணியை பூஜா பூமி அல்லது புனித காணியாகக் கருதுவதாக அறிவித்து வந்தார்.
அதனடிப்படையில் அவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரி புல்மோட்டை காவல்நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலேயே அங்குப் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த குச்சவெளி பிரதேச செயலாளரின் தலைமையில் குறித்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, புல்மோட்டை பகுதியில் மக்களுடைய பெருமளவான காணிகளை பூஜா பூமி என்ற பெயரில் குறித்த பௌத்த பிக்கு ஆக்கிரமித்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.