நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது
அதற்கமைய பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
காலை 10.15 அளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29க்கு மணி ஒலி எழுப்பப்பட்டது.
இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்றவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிதிர்க்கடன் செலுத்தப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் இன்று காலை நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம், மன்னார் பஜார் பகுதியிலும் இன்றைய தினம் காலை 9 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் பகிரப்பட்டது
இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்