கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ், எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்டோர்னோவேயில் தொடர்ந்து வசித்து வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கார்லெட்டன் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
இதனால், பல ஆண்டுகளாக தாம் வகித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பியர் பொய்லிவ் இழந்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுச்சபையில் உறுப்பினர் ஆகும் தகைமையை தற்போது இழந்துவிட்ட போதிலும், எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்டோர்னோவேயில் அவர் தொடர்ந்தும் வசித்து வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொய்லிவ் விரைவில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாலும், இடைத்தேர்தலை விரைவாக நடத்த பிரதமர் கார்னி உறுதியளித்திருப்பதாலும், குடும்பத்தை வெளியேற்றி மீண்டும் குடியிருப்புக்குக் கொண்டு வருவது வரி செலுத்துவோருக்கு அதிக செலவாகும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி விளக்கமளித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில், கனேடிய நாடாளுமன்றப் பொதுச்சபையின் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரூ ஷீர், இந்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்களுக்குள் தங்கள் நாடாளுமன்ற மற்றும் தொகுதி அலுவலகங்களை கையளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற விதி உள்ள போதும், ஸ்டோர்னோவே இல்லத்தில் யார் தங்குவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கன்சர்வேட்டிவ் கட்சியே வைத்துள்ளது.