தென்கிழக்கு மனிடோபாவில், லக் டு போனட் நகருக்கு அருகே ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்களை காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை சில நபர்கள் தீயில் சிக்கியிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
எனினும், தீயின் உக்கிரம் காரணமாக புதன்கிழமை காலை வரை அவர்களைச் சென்றடைய முடியவில்லை என, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, இந்த தீ சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து கொண்டிருந்தது.
விண்ணிபெக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்டிகோ சாலை அருகே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்று, காவல்துறை அதிகாரி கிறிஸ் ஹாஸ்டி தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் ஏற்பட்ட காயங்களால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பணிபுரியும் வகையில் பொதுமக்கள் தீப்ப்பரவல் ஏற்பட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு திரு. ஹாஸ்டி கேட்டுக்கொண்டார்.
வெப்பப் பகுதிகள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் போன்ற ஆபத்துகள் அங்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர ஊர்திகள் மட்டுமே அப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நெடுஞ்சாலை 313 இல், காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
இதேவேளை, லக் டு போனட் நகர் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ செவ்வாய்க்கிழமை பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.