அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்ரல் 21-ம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து பாப்பரசர் பதவி வெற்றிடமாகவுள்ளமையால் புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைமுறை இந்த வாரம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளை மாளிகையும் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த வேளையில் ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகத்தில் சிலர் இந்தப் படத்தை வேடிக்கையாக பார்த்தாலும் பலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இப்பதிவு அவமரியாதைக்குரியது, பாப்பரசர் பிரான்சிஸ் மரணத்தை ட்ரம்ப் கேலி செய்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவு கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசுகையில், “நான் பாப்பரசர் ஆக விரும்புகிறேன், அதுவே எனது முதல் தேர்வாக இருக்கும்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்