சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில், பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு இன்றைய தினம் (08) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
மகளிர் பேரவையின் தலைவி முராளினி தினேஸ் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கிளிநொச்சி மாவட்டச் செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்ணம் மற்றும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் மதினி நெல்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு பெண்களின் பங்கேற்போடு நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரையை வழங்கியிருந்தார்.
அதேவேளை பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயச்சித்திரா தயானந்தன் அவர்களின் அரசியல், சமூகப் பணிகளை மதிப்பளித்து ‘மண்ணின் மாதவம்-2025’ எனும் விருது வழங்கிவைக்கப்பட்டதுடன், அரசியல் பணிகளில் தம்மை தொடர்ச்சியாக ஈடுபடுத்தி வரும் பெண்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.