வவுனியாவில் நகரசபை, செட்டிகுளம், நெடுங்கேணி மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தெரிவித்தார்.
இன்றையதினம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது அமைப்பானது 2015ம் ஆண்டு தொடக்கம் எமது சமூகத்துககாக இயங்கிவரும் அமைப்பாகும். அந்தவகையிலே 2018ம் ஆண்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிட்டு இரு ஆசனங்களை பெற்றிருந்தோம்.
மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பானது தலைவர் பதவியினை ஏற்பதற்கான ஆதரவினை நாம் வழங்கியிருந்தோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எம்முடன் இறுதி ஒரு வருடத்திற்கு எமக்கு தலைவர் பதவியினை தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இறுதி வருடத்தில் எமக்கு தருவதாக தெரிவித்த தலைவர் பதவி தொடர்பாக கேட்கப்பட்ட போது அதனை தர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலிலே வவுனியா நகர சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் நாம் போட்டியிடுவதற்கான அனுமதியினை மத்திய குழு எமக்கு தந்துள்ளது.
மேலும் இதற்கான வேட்பாளர் தெரிவுகளும் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன் இத்தேர்தலிலே நாங்கள் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக 2018ம் ஆண்டு தொடக்கம் எமது தமிழ் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பதிலும் தமிழ் தேசியத்திற்கு எந்தவித இழுக்கும் ஏற்படக்கூடாது என்ற ரீதியிலும் செயற்பட்டு வருகின்றோம்.
இந்நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் எவையும் எம்முடன் கூட்டாக இணைந்து போட்டியிடுவதானாலும் சரி அல்லது எம்முடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதாக இருந்தாலும் சரி நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் குறித்த நான்கு சபைகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.