புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பேசவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.
கூட்டத்தொடரில் உரையாற்றிய விஜித ஹேரத் காணாமல் போனோர் அலுவலகம்,தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகம் உள்ளிட்டவை வலுப்படுத்தப்படும் எனக் கூறியிருந்ததாகவும் எனினும் பாதீட்டில் இதற்கென போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
பேச்சளவில் மாத்திரம் இருந்தால் போதாது எனவும் நடைமுறையில் இதனைச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுவதுமாக நீக்குவோம் என வாக்குறுதியளித்த அரசாங்கம் தற்போது அந்த சட்டத்திற்குப் பதிலாக மற்றுமொரு மாற்றீட்டு சட்டத்தை உருவாக்குவதாக கூறுகிறது எனத் தெரிவித்தார்.
சாட்சியங்களை சேகரிப்பதற்கான நெறிமுறையை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் கூறினார்.
இது மிகவும் மோசமான விடயம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.
உண்மையில் யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பதை அறிவதில் ஆர்வமில்லை அல்லது அதனை மூடி மறைக்க வேண்டும் என்ற வகையிலே இந்த புதிய அரசாங்கமும் செயற்படுவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் உண்மையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் உண்மையை மறைத்து எப்போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் அபிலாஷைகளை மூடி மறைக்கும் வகையில் அமைவதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் போக்கைக் கண்டிப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்