நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் மிக விரைவில் வெளியேறுவார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இருப்பினும், தமிழ் தேசிய பாதையில் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு, 3,000 நா.த.க உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நட்சத்திர பேச்சாளரும், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தகவல் குறித்து சீமான் பேசிய போது, “அது தெரியவில்லை. இந்த கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும், விருப்பம் இல்லையென்றால் விலகி செல்வதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. அவர் முதலில் சமூக செயற்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து வந்தது நான் தான். தங்கச்சிக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியில் இருக்கிறதா? அல்லது வேறு கட்சியில் இணைந்து செயல்படுவதா? என்ற முடிவெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்று கூறியிருந்தார்.