யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் என்பவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி எஸ்.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என்று பேராசிரியர் ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு, பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளது.
பின்னணி.
கலைப்பீடத்தில் பாடத்தெரிவில் வெளிப்படையான ஒரு முறைமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வட்ஸ்அப் செயலியில் கருத்துத் தெரிவித்த மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்த ஒழுக்காற்று விசாரணைக் குழு, இரு மாணவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்குவது என்று மட்டுமே தீர்மானித்திருந்தது. ஆனால் கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலுக்கு அமைய ஒரு வருடத்துக்கு மாணவ நிலையிலிருந்து அவர்களை இடைநிறுத்தும் தண்டனை வழங்கப்பட்டது.
அதேவேளை விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராலும், துணைத்தலைவராலும் மாணவர்கள் பூட்டை உடைத்தது தொடர்பானது. பலமுறை கூறியும் அந்தப் பூட்டுத் திறக்கப்படாததால் பூட்டை உடைத்த குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கும் வகுப்புத்தடை தண்டனை வழங்கப்பட்டிருந்து.
அத்துடன் பரமேஸ்வரன் ஆலயத்துக்கு அண்மையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பானது. இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு மாணவனுக்கு எதிராக மட்டும் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவித்து ஒரு வருடம் மாணவ நிலையில் இருந்து இடைநிறுது்த வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. ஆனால் போராசிரியர் ரகுராமின் அழுத்தத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று சபை 5 மாணவர்களுக்கு எதிராகவும் ஒரு வருட இடைநிறுத்த தண்டனையை வழங்கியது.
குறித்த மூன்று விடயங்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம்வரை செயலாற்றிய சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.