தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோருடனான விஜய் சந்திப்புக்கு பணக் கொழுப்புதான் காரணம் என சீமான் பேசியதற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காமராஜர், அண்ணா, ஓமந்துரார் போன்றவர்கள் வியூக வகுப்பாளர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தவில்லை. என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை.. இதில் எதை எதை எப்படி செய்தால் சரிவரும் என தெரியாத நான் ஏன் இந்த அரசியலுக்கு வர வேண்டும்? எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெல்ல முடியும்? என்பதை கூட தெரியாமல் இருந்தால் எப்படி? எனக்கு நிறைய மூளை இருக்கிறது.. காசுதான் இல்லை..அதனால் எனக்கு அது தேவை இல்லை.. எத்தனை வியூகத்தை வகுத்து என்ன செய்வது? மேசையில் உட்கார்ந்து கொண்டு கத்தரிக்காய் என எழுதுவதால் கத்தரிக்காய் வந்துவிடாதா? அதை விளைவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலமாக வியூக வகுப்பாளர்களை பயன்படுத்துகிற நோய் வந்துவிட்டது; பிரசாந்த் கிஷோருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டைப் பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்னதான் தெரியும்? உடலில் கொழுப்பு கேள்விபட்டிருப்பீர்கள்… பணத்தில் கொழுப்பு கேள்விபட்டிருக்கிறீர்களா? வாய்க்கொழுப்பு அதிகம் என்பது மாதிரி பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் தேவைப்படும் என்றார்.