பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் கொடுத்த 29 இலட்சம் ரூபா பணத்தை வசூலித்து தருவதற்கு பொலிசாருக்கு 3 வீதம் பணம் கொடுக்க வேண்டும் என பொய் தெரிவித்து மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்துக்குள் சென்று வருவதுபோல பாசாங்கு காட்டி வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்துள்ளதாக மட்டு விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் முகாமையாளராக கடமை யாற்றிவரும் ஒருவர் மீன்ரின் விற்பனை வர்த்தகம் செய்வதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 29 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த வர்த்தக நடவடிக்கை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து வழங்கிய பணத்தை வர்த்தகரிடம் மீள தருமாறு கோரி வந்த நிலையில் அவர் பணத்தை கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பிரதேசத்திலுள்ள வங்கிக்கு சென்றுவந்த 21 வயதுடைய இளைஞனுக்கும் வங்கி முகாமையாருக்கும் இடையே நட்பு ஏற்பட்ட நிலையில் முகாமையாளர் தான் வர்த்தகம் செய்ய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் அவருக்கு எதிராக மட்டக்களப்பு விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞன் தனக்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் அவ்வாறே மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தெரியும் நான் அவருடன் பேசி பணத்தை வாங்கிதருகின்றேன் அவருக்கு 3 வீதம் பணம் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளான்.
அதற்கு சம்மதித்த வங்கி முகாமையாளரை கூட்டிக் கொண்டு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்குள் வெளியில் வங்கி முகாமையாளரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று வருவது போல பாசாங்கு காட்டிவிட்டு எல்லாம் சரி என முற்பணமக 30 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டான்.
அதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் மிகுதி 20 ஆயிரம் ரூபா கொடுக்க வேண்டும் நான் குறித்த பொலிஸ் காரியாலயத்தின் முன் நிற்பதாக தெரிவித்து முகாமையாளரை அழைத்துள்ள நிலையில் அவர் 20 ஆயிரம் ரூபாவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயப்பகுதிக்கு சென்று இளைஞனை அங்கு விட்டுவிட்டு அவர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து தான் வங்கி முகாமையாளர் என தெரிவித்து தான் கொண்டு சென்ற பழங்களை பரிசாக கொடுத்து நீங்கள் செய்த உதவிக்கு நன்றி மிகுதி பணம் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைகேட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த முகாமையாளரை ஆச்சரியமாக பார்த்து என்ன செய்தேன் என கேட்டபோது முகாமையாளர் தயக்கத்தின் பின்னர் இளைஞன் இவ்வாறு நடந்து கொண்டான் அதனால் மிகுதி பணத்துடன் வந்துள்ளதாக நடந்தவற்றை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் அப்படி ஒருவரையும் தெரியாது நான் புதிதாக வந்துள்ளதாக தெரிவித்து அங்கு வெளியில் நின்றிருந்த குறித்த இனைஞனை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரின் பெயரை பயன்படுத்தி களங்கம் விளைவித்து சட்டவிரோதமாக பணம் வாங்கிவந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.