தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் கால்கோள் விழா வவுனியா பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றது.
தேசிய ரீதியில் தரம் 1 இற்கு மாணவர்களை உள்வாங்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (30.01) நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கால் கோள் விழா அதிபர் திருமதி ஞா.மோகனதாஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை முன்றலில் இருந்து பிரதம, சிறப்பு விருந்தினர்கள், புதிய மாணவர்கள் பாண்ட் வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டதுடன், பாடசாலையின் தரம் 2 மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து கைலாகு கொடுத்து வரவேற்றனர். அத்துடன் நடனம், பாடல் முதலிய நிகழ்வுகளும் தரம் 1 மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் றபி அஸ்லம், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் பா.லம்போதரன் மற்றும் விருந்தினர்களாக பிரதி அதிபர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.