இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட அந்த கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கனேடிய தூதுவரை சந்தித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கைமய, நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.