‘கலா ரசனா’ அமைப்பு யாழ். கலாசார மண்டபத்தால் இரு இசை, நடன நிகழ்வுகளை சில தினங்களுக்கு முன் நடாத்தி இருந்தது.
முதல் நாள் சிறப்பு இசை அரங்காக, இந்தியாவிலிருந்து வந்த பிரபல திரை இசைப் பின்னணி பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான பாலக்காடு சிறீராமின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து வந்த பக்கவாத்திய கலைஞர்கள் பக்கல ராமதாஸ் (வயலின்), ஏ. எஸ். ரங்கநாதன் (மிருதங்கம்) ஆகியோருடன் இலங்கைக் கலைஞரான சிவசுந்தரசர்மாவும் (கெஞ்சிரா) கலந்துகொண்டார்.
இரண்டாம் நாள் இரு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அமெரிக்காவிலிருந்து வந்த பரதநாட்டிய கலைஞர் கலைமகள் சந்திரசேகரம் ‘சங்கமும் சுனாமியும்’ என்று, சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை தற்போதைய காலத்துடனும் தொடர்புபடுத்தி, சிறந்த உரை விளக்கமும் சேர அளித்த நடன நிகழ்வு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கொழும்பு தியாகராஜர் கலைக்கோவில் அளித்த ‘மனம் சுமந்த வலிகள்’ நாட்டிய நாடகம் நடைபெற்றது.
நடன ஆசிரியை பவானி குகப்பிரியா நெறிப்படுத்தியிருந்த இந் நாட்டிய நாடகத்தில் முப்பது பேர் வரை பங்குபற்றியிருந்தனர். தென்கயிலை ஆதீன முதவர் அகத்தியர் அடிகளார் பாடல் வரிகளை ஆக்கியிருந்தார்.
அடுத்த சங்கமம் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் வட மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர், இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாண ஆளுநர் திரு நா. வேதநாயகம் கலந்து கொண்டார்.