வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
யாழ் . நகர் பகுதியில் கனரக வாகனத்தில் வாடகை சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவரின் நகைகளே நேற்றைய தினம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வாகன வாடகை தரிப்பிடத்திற்கு வந்த இருவர், கிளிநொச்சி பகுதியில் இருந்து பொருட்களை ஏற்றி வர வேண்டும் என கூறி வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.
இடையில் பரந்தன் பகுதியில், வீதியோரமாக வாகனத்தை நிறுத்த கோரி , அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.
அதனை குடித்தவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். வீதியோரமாக நீண்ட நேரமாக வாகனத்தில் சாரதி அசைவின்றி காணப்பட்டதை அவதானித்தவர்கள், சாரதியின் அருகில் சென்று பார்த்த போது, சாரதி மயக்கத்தில் இருப்பதனை அறிந்து உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே சாரதி சுயநினைவுக்கு வந்துள்ளார். அதன் பின்னரே தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.