இளைஞன் ஒருவரை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவம் ஒன்றின் தொடர்ச்சியாக சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் கடந்த பொங்கல் தினத்தன்று, 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் பிரபல வர்த்தகரின் மகனை கைது செய்து விசாரணைகளை பின்னர் யாழ் . நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 06 சந்தேகநபர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.