அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன.
குறிப்பாக, பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது மர்ம நபர் தாக்கிய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பிப் பிழைத்தது பெரிய அளவில் பேசுபொருளானது. இதனால், ட்ரம்புக்கு ஆதரவு அலையும் அதிகரித்தது. இந்தச் சூழலில் ஏற்கெனவே வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் ஜனநாயக கட்சி வேட்பாளரிலிருந்து அதிபர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, ஜோ பைடனே, துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்தார். இதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸுக்கு, கருத்துக்கணிப்புகளும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.