யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி, குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்குக் காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தின் போது வாகனத்தைச் செலுத்திய சாரதி தான் எனப் பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுபோதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (13.11.2026) மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும், மகனையும் கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரி மத்துவில் தெற்கைச் சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (வயது 51), அவரது மகனான செல்வராஜ் டிசாந்த் (வயது 09) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
விபத்துச் சம்பவத்தை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், வாகனச் சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாகச் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அன்றைய தினம் இரவே மட்டுவிலைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் தானே வாகனச் சாரதி எனப் பொலிஸாரிடம் சரணடைந்தார். அவரைக் கைது செய்து, சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவர் மதுபோதையில் இருந்தமை முதல்கட்டமாக உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனச் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக அன்றைய தினம் விபத்து நடைபெற்ற பகுதியைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கூடி கோரிக்கை விடுத்திருந்தனர்.
விபத்து இடம்பெற்றவுடன் வாகனத்தில் நிறைபோதையில் இருந்த சாரதி உள்ளிட்டவர்கள் தப்பிய ஓடியதைத் தாம் கண்கூடாகக் கண்டதாகவும், விபத்து நடந்து சில நிமிடங்களில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் வாகனத்தை உடனே அகற்ற முற்பட்டபோது தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் வாகனத்தினுள் இருந்து ‘ரிமோட் கீ’யை எடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணைகள் இன்றி வாகனத்தை ஏன் அப்புறப்படுத்தினர் எனப் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சாவகச்சேரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக சில்வா, வாகனத்திற்குச் சேதம் விளைவிக்கப்படலாம் என்ற நிலை இருந்ததால் பொலிஸார் அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும், தொலைபேசி அடிப்படையில் திறப்பை அடையாளம் கண்டு எடுத்த குற்றச்சாட்டு குறித்துத் தொலைபேசித் தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். கண்கண்ட சாட்சியங்கள் இருப்பின் பயமின்றி வாக்குமூலம் வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் விபத்து நடைபெற்ற நேரத்தில் வாகனத்தினுள் இருந்தவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தினுள் இருந்த ஐவரைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் போது, அன்றைய தினம் கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவரே வாகனத்தைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினார் என்பதும், விபத்து நடைபெற்ற நேரத்தில் சரணடைந்தவர் சாரதி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சாரதி ஆள் மாறாட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
