வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 22ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாகக் காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்துச் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும், ஆனால் தாம் நீண்ட காலமாக நிலங்கள் மற்றும் வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு, தமது வீடுகள் மற்றும் காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்திற்காக 4,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், வலி. வடக்கில் மக்களின் சுமார் 2,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனத் தாம் போராடி வருவதாகக் குறிப்பிட்டனர்.
தமது காணிகளை விடுவித்தால் மாத்திரமே தம்மால் மீண்டும் குடியமர முடியும் எனவும், காணிகளை விடுவித்து மீள்குடியேற அனுமதித்தாலேயே மீள்குடியேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் தமக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட உதவித் திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, தமது காணிகளை விடுவித்துத் தம்மை மீள்குடியேற்ற அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
