Québec மாகாண சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், Montréal மற்றும் Greater Montréal பகுதிகள் முக்கியமான தேர்தல் பிரச்சார மையங்களாக மாறியுள்ளன.
அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, ஐந்து பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாக்காளர்களைச் சந்தித்து தங்களது கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து வருகின்றனர்.
தற்போதைய பிரச்சாரத்தில் வீட்டு வசதி, வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் முக்கிய பேசுபொருட்களாக உள்ளன.
குறிப்பாக Montréal பகுதியில் வீட்டு வசதி மற்றும் மலிவு விலை வீடுகள் தொடர்பான பிரச்சினைகள் அதிக கவனம் பெற்றுள்ளன. அதேவேளை, Montréal மற்றும் South Shore பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இதேவேளை, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் குடியேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய விவகாரங்களும் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் களத்தில் வாக்காளர் ஆதரவு தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்த Léger கருத்துக்கணிப்பில் Parti Québécois 29 சதவீத ஆதரவுடனும், Québec Liberal Party 23 சதவீதத்துடனும், CAQ 20 சதவீதத்துடனும், Conservative Party 17 சதவீதத்துடனும், Québec solidaire 10 சதவீதத்துடனும் பதிவாகியுள்ளன. அதேவேளை, செப்டம்பர் 19ஆம் தேதி நிறைவடைந்த Pallas கருத்துக்கணிப்பில் PQ 28, CAQ 22, Liberal 22, Conservative 16 மற்றும் Québec solidaire 11 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தன.
Québec தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு செப்டம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ தேர்தல் நாள் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Montréal உள்ளிட்ட Québec முழுவதும் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.


