ஒன்ராறியோ மாகாணத்தில் இடம்பெறவுள்ள இடைத்தேர்தலில், பிராண்ட்போர்ட் (Brantford) நகர மேயர் கெவின் டேவிஸ் (Kevin Davis) நேரடியாக கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பு இன்றி, அந்தக் கட்சித் தலைவர் பியர் பொலிவேர் (Pierre Poilievre) இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.
கெவின் டேவிஸ் (Kevin Davis) வேட்பாளராக நேரடியாக நியமித்துள்ளமைக்குக் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.
கன்சர்வேடிவ் கட்சியின் பாரம்பரிய ஜனநாயக நடைமுறையான ’வேட்பாளர் தேர்வை (nomination contest) தவிர்க்கும் வகையில்
மேற்கொள்ளப்பட்ட இந்த நேரடி நியமனம், உள்ளூர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லாரி புரோக் (Larry Brock) மற்றும் பில் மெக்கோல்மேன் (Phil McColeman) ஆகிய இரு மூத்த தலைவர்கள் பொய்லியேவ் உரையாற்றிக்கொண்டிருந்த போதே, மேடையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இத்தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லாரி புரோக், மீண்டும் அரசு வழக்கறிஞர் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
அவர் டேவ் கேரல் (Dave Carrol) என்பவரைத் தனது வாரிசு வேட்பாளராக ஆதரித்து வந்த நிலையில், கட்சித்தலைமையின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த கன்சர்வேடிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாரா ஃபிஷர், “வரவிருக்கும் இடைத்தேர்தலைத் தாமதமின்றி எதிர்கொள்ளவும், உடனடியாகப் பிரசாரத்தைத் தொடங்கவுமே கட்சித் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கெவின் டேவிஸ் நியமிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடியக் கன்சர்வேடிவ் கட்சியின் விதிகளின்படி, பொதுத்தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டு தொகுதிகள் வரை தலைவரே நேரடியாக வேட்பாளர்களை நியமிக்க அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


