கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் பிரஜைகள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) முன்னெடுத்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு மற்றும் சந்தேக நபர்களின் பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த மேலதிக கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

