ஸ்விட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஆராவ் நகரில் நடைபெற்ற ‘ஆராவ் ரேவ் VOL. 7′ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் அதிகாலை 2:30 மணியளவில் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
குதிரைப் பந்தய மைதானத்தில் சுமார் 3,500 பேர் திரண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதால், தொடக்கத்தில் மக்கள் அதை பட்டாசு எனக் கருதி குழப்பமடைந்தனர்.
பின்னர் உடனடியாக நிலமையை உணர்ந்து நாலாபுறமும் சிதறி ஓடியும், மேடை மற்றும் அரங்குகளின் அடியில் ஒளிந்தும் மக்கள் பலர் தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இந்த எதிர்பாராத கொடூர சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து வந்த ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற மர்ம நபரைப் பிடிக்க ராணுவத்தின் சூப்பர் பூமா ஹெலிகாப்டர் மற்றும் ஜெர்மனி எல்லைக் காவல் படைகளின் உதவியுடன் தீவிர தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் ஆர்காவ் மாகாணக் காவல்துறை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க தற்போது ஷாசென் பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் அணுக தடை விதிக்கப்பட்டுள்ளது.

