இலங்கைத் தமிழரசுக் கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கட்சி ஒழுக்கம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பொதுச் செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 31ஆம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சியின் முடிவுகளுக்கு முரணாக நடந்து கொண்டு தற்போது கட்சியின் பதில் தலைவர்,பதில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வரும் M.A சுமந்திரன் , அந்தப் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் தெரிவு, காங்கேசன்துறை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அமைத்தல் மற்றும் 2026ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டக் கிளை அமைப்பு தொடர்பாக கிடைத்த முறையீடுகளை ஆராய்வதற்காக சுயாதீன விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கட்சி யாப்பு மற்றும் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.
