உலக சந்தையில் எரிபொருளின் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“டீசலுக்கு 100 ரூபாயும், பெட்ரோலுக்கு 20 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. எரிபொருள் மானியத்தை சமமாக வழங்குவதில்லை. தற்போது மானியத்திற்காக அமைச்சரவையினால் 57 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
விலை திருத்தம் செய்யப்படுவது குறித்து இப்போது கூற முடியாது. உலக சந்தையின் விலைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கும். மார்ச் மாதத்தில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் யுத்த சூழல் ஆரம்பமான காலகட்டம் அது. போருக்கான முடிவை யார் எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.
உலக சந்தையில் விலை அதிகரித்ததன் காரணமாகவே இலங்கை சந்தையிலும் விலை அதிகரித்தது. உலக சந்தையில் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நன்மையை மக்களுக்கு வழங்குவோம். விலை குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.”


