வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் எடுத்தோம். இதனால், வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரான கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற இந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது.
தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.
வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம்.
எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , பொலிஸார் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பணித்துள்ளோம்.
கட்சி,ஜாதி, இனம், மதம் என்ற எந்த வேறுபாடுகள் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது
இந்த பிரதேசத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள், உங்களின் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக வேண்டும்.
பிரிவினை வாதம் வேறுபாடுகள் தலைதூக்க அனுமதிக்க கூடாது.. அவ்வாறான நிலை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட கூடாது. எமது பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியின் ஒற்றுமையான வாழ்வே.
அதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கா விடின், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அல்லது பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்.தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு
பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதே , மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்படும் விருதே. எனவே மக்களின் நன்மதிப்பை பொலிஸார் பெற வேண்டும். அவ்வாறு நன்மதிப்பை பெற்றுக்கொள்வதே பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதாகும்.
வடக்கில் மொழி பிரச்சனை இன்றி சேவைகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் பொலிஸ் சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.


