வவுனியா, ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளிக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு முற்றம் (31-05) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான மருதங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த முன்பள்ளிக்கு, பாதுகாப்பான விளையாட்டு முற்றம் ஒன்று இல்லாதமையினால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சிறுவர் விளையாட்டு முற்றம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வவுனியா அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் குறித்த விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ரி. சுதாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
