ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி மசகு எண்ணெயை ஏற்றிய மூன்று ஈரானிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் ‘கெப்லர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில், கடந்த திங்கட்கிழமை முதல் ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையை அமுல்படுத்தியது.
இந்தத் தடை விதிக்கப்பட்ட பின்னர், பாரிய அளவிலான மசகு எண்ணெயுடன் ஈரானிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Deep Sea , Sonia I மற்றும் Diona ஆகிய மூன்று கப்பல்களே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்துள்ளன.
இந்தக் கப்பல்கள் மொத்தமாக 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்வதாக கெப்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி ‘ஸ்டார்லா’ (Starla) எனும் கப்பல் புறப்பட்டதன் பின்னர் மசகு எண்ணெயுடன் கூடிய எந்தவொரு ஈரானிய கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை கடக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பல்கள் ஈரானின் கார்க் தீவில் எண்ணெயை ஏற்றிக்கொண்டு கடந்த புதன்கிழமை ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டியுள்ளன.
அமெரிக்காவின் கடுமையான முற்றுகைக்கு மத்தியில் ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச ரீதியில் அவதானத்தைப் பெற்றுள்ளது.
