வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி (GPS) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன.
இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இதனால் இரவு வேளைகளில் கனிய வளங்களை எடுத்து செல்லல் , வெளி மாவட்டங்கள் , மாகாணங்களில் இருந்து கனிய வளங்களை கொண்டு வருவதனை ஒழுங்குபடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
அதேவேளை கனிய வள திணைக்களத்தால் வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பில் காவல் துறையினர் , எமது விசேட குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதனூடாக மக்களுக்கும் தகவல்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
அவ்வாறு தகவல்கள் பொது வெளிகளில் தெரியப்படுத்தப்படும் போது, கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம்.
கனிய வள தேவையுடையோர் மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள் ஊடாக விண்ணப்பித்து அதனை பெற முடியும். அதனூடாக மணல் கடத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் மக்கள் நியாய விலைகளில் மணலை பெற்றுக்கொள்ள முடியும்
அத்துடன் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடயறி (GPS) பொருத்தி அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
