முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வழங்கிய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கினார். ஆனால் இந்த அரசாங்கம் இந்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கின்றது என இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்தார்.
பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) திகதி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தலைமையில் பட்டதாரிகள் முறைப்பாடு செய்தனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 6 வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றோம் அந்த வகையில் கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தோம்.
அந்த வகையில் கடந்த அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வை தர இருந்தபோதும் ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு தற்போதைய அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை ஆற்றிக் கொண்டு வருகின்ற பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க பல விடையங்களை கூறிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பிரதமர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளது எனவே இவர்களை போட்டிப்பரீட்சை மூலம் உள்வாங்க அனைத்து ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார். இருந்தபோதும் மத்திய அரசாங்கம் சார்ந்த வழக்கு மாத்திரம் நிறைவுற்றுள்ளது.
மாகாண சபை சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 29ம் திகதி இருக்கிறது ஆனால் பிரதமர் அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளதாக பொய் உரையை பாராளுமன்றத்தில் ஏன் செய்துள்ளார்? என ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.