இந்தியர்களுக்குப் பிடித்த பொருட்களைக் குறைத்த விலையில் நாளை காலை முதல் கொள்வனவு செய்ய முடியும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் அமலாகும் ஜி.எஸ்.டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை மூலம் மக்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தம் நாளை 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனால், இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய மக்களுக்குப் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நவராத்திரியின் முதல் நாளில் ஜி.எஸ்.டி சீர்திருத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளை முதல் இந்திய மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பியதை எளிதாகக் கொள்வனவு செய்து கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
