கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசேட நடமாடும் சேவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாவும், கெளரவ விருந்தினர்களாக சனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்திரு. துலீப் சேமரத்தன ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் வடக்கு மாகண சபை செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கிளீன் ஸ்ரீலங்கா குழுவினர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வின் இறுதியில் விசேட நிகழ்வாக புதுமணத் தம்பதி ஒருவருக்கான பிறப்புச் சான்றிதழ் முதல் தடவையாக வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பதிவுத் திருமணம் நடைபெற்றதுடன், திருமணப் பதிவுச் சான்றிதழ் உத்தியோகபூர்வமாக அமைச்சர் அவர்களால் தம்பதியினருக்கு வழங்கப்பட்டது.
மேலும் புதிதாக பதியப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது.
இதன்படி பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிக்கான ரயர்களும் பொதுமக்களுக்கான தென்னங்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கண் பரிசோதனை யின் பின்னரான இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
