எகிப்தின் கெய்ரோ நகரிலுள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் எரிபொருள் தாங்கி வாகனம் விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பழைய நகர மையத்திற்கு வடக்கே வார்ராக் (Warraq) பகுதியிலுள்ள சுற்றுவட்டச் சாலையில் புதன்கிழமை (26.11.2026) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தீக்காயங்கள் மற்றும் புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளிகளில், வானுயர எழுந்த தீப்பிழம்புகளும் கரும்புகையும் காணப்பட்டதுடன், அருகிலிருந்த பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான உத்தியோகபூர்வ காரணத்தை அதிகாரிகள் வெளியிடாத போதிலும், எரிபொருள் தாங்கி கவிழ்ந்ததில் அருகிலிருந்த வாகனங்கள் மீது பெற்றோல் சிதறித் தீப்பற்றியதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனியார் ஒப்பந்தக்காரர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த எரிபொருள் தாங்கி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முன்னால் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததால் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாகனம் வீதியின் நடுப்பகுதியைக் கடந்து கவிழ்ந்து தீப்பற்றியதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் பிராந்திய பொது வழக்கறிஞர் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் சடலங்களிலிருந்து டி.என்.ஏ (DNA) மாதிரிகளைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்தைத் தொடர்ந்து 39 அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, கெய்ரோ வைத்தியசாலையொன்றில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை சுகாதார அமைச்சர் நேரில் பார்வையிடும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
புல்டோசர் இயந்திரங்கள் மூலம் எரிந்து போன வாகனங்களின் எச்சங்கள் அகற்றப்பட்டு, குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அரச ஒலிபரப்பு நிறுவனமான என்.எம்.ஏ (NMA) செய்தி வெளியிட்டுள்ளது.
