யாழ்ப்பாணத்தில் தமக்குச் சொந்தமான பேருந்து நிலையத்திலிருந்தே தொடர்ந்து சேவைகளை முன்னெடுப்போம் என, இலங்கை போக்குவரத்துச் சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் முயற்சிகள் கைவிடப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், யாழ்ப்பாணத்திலிருந்து 100 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்குச் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள், யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாம் வேறு இடத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கப் போவதில்லை எனத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட பேருந்து நிலையக் காணியை மீளப்பெறுவதற்கு மாநகர சபை முயற்சிப்பதாகவும், அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி வேறு இடத்தில் சேவைகளை ஆரம்பித்தால் தங்களது சாலையும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் எனத் தொழிற்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
