போலந்தின் இரண்டாவது பெரிய நகரமும் பிரபல சுற்றுலாத் தலமுமான கிராகோவின் முக்கிய சதுக்கத்தில், கார் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சந்தேக நபருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
அதில் ஒரு பொலிஸ் அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இராணுவ ஆடை அணிந்திருந்த 24 வயதுடைய போலந்து நாட்டவரான சந்தேக நபரை பொலிஸார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (07.11.2026) பிற்பகல் 3 மணியளவில் கார் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் AR-15 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும், அவரிடம் துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரிடமிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து தனக்குத் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இச்சம்பவத்திற்குக் கடும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
