மட்டக்களப்பில், 2007ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்திச் சென்று சிறை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு, சவுக்கடி பகுதியில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நடராசா சதீஷ் ராசா எனப்படும் காதர் என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகள், 2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவரைக் கடத்திச் சென்று பலவந்தமாகச் சிறை வைத்த குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

