திருகோணமலையில் தனது தந்தையைப் பொல்லால் தாக்கிப் படுகொலை செய்த 35 வயதுடைய மகனுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
தோப்பூர், பாலத்தடிச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கே இவ்வாறு வியாழக்கிழமை (22.10.2026) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பாலத்தடிச்சேனை, தோப்பூர் பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த கைலாசப்பிள்ளை வினோதரன், தனது தந்தையான 59 வயதுடைய முருகுப்பிள்ளை கைலாசப்பிள்ளை என்பவரைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் இவருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இவ்வழக்கில் வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான சிகான் முஸ்தாபா மற்றும் செசான் மஹபூ ஆகியோர் வாதாடி வந்தனர்.
வழக்கு விசாரணைகளின் முடிவில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, தண்டனைக்கவைச் சட்டத்தின் 296ஆம் பிரிவின் கீழ் எதிராளியான கைலாசப்பிள்ளை வினோதரனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

