மொன்றியல் நகரில், முதியோர் குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புறத்தில் 95 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் ஒக்டோபர் 18ஆம் திகதி, மொன்றியலின் மெர்சியே–ஹோஷலாகா–மைசொனேவ் பகுதியில் அமைந்துள்ள Elogia முதியோர் குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஷெர்ப்ரூக் கிழக்கு வீதியில், லசொம்ப்ஷன் பவுல்வார்ட் அருகே அமைந்துள்ள இந்தக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த 95 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புறப் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், அங்குள்ள புதர்களுக்குள் முதியவர் கிடப்பதைக் கண்டு இந்தத் தகவலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்டத் தகவல்களின்படி, முதியவரின் உடலில் வன்முறைக்கான வெளிப்படையான அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை.
எனினும், அவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாரா அல்லது அன்றைய இரவு நிலவிய குளிரான காலநிலை அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்ததா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவத்திற்கு முந்தைய இரவில், மொன்றியலில் வெப்பநிலை 2.3 பாகை செல்சியஸ் வரை குறைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காக கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரியான கொரோனர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் தனிப்பட்ட மற்றும் மருத்துவத் தகவல்களை வெளியிட முடியாது என Elogia குடியிருப்பு வளாகத்தை நிர்வகிக்கும் Groupe Maurice நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதியவரின் மரணத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

