கனடாவின் பொருளாதார நிலைமை தொடர்பாக வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்கள், வேலை தேடுவோருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் கனடாவில் சுமார் 68 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக Statistics Canada வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலும் சுமார் 42 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்திருந்தன. இதனால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்த நிலையில், செப்டெம்பர் மாதத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் சமூக உதவிச் சேவைகள், உற்பத்தித்துறை ஆகியவற்றிலும் வேலைவாய்ப்புச் சரிவு பதிவாகியுள்ளது.
மாகாண ரீதியாகப் பார்க்கும்போது, கியூபெக் மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தில் 49 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. அங்கு வேலையின்மை விகிதம் 6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, அல்பேர்ட்டா மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலைமை, கனடாவில் புதிதாகக் குடியேறியவர்கள், சர்வதேச மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், வட்டி விகிதங்கள் மற்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது கவனிக்கப்படும் விடயமாக உள்ளது.
