அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான மோதிரம் தயாரிப்பு வீடியோவை முதலமைச்சர் விஜய் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்ற இத்திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் 28-ஆம் திகதி தொடங்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ஆம் திகதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் சார்பில் வழங்கப்படும் சீர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டத்திற்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 107 அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.


