ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த புதிய ஆண் யானையை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யானையை கோவிலுக்கு தானமாக கொடுத்தவர்கள் விட்டு சென்ற போது பிரியாவிடை கொடுக்க மறுத்து யானை கண்ணீர் விட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ராமலட்சுமி என்ற பெண் யானை உள்ளது.
ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ராமலட்சுமி யிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். மேலும் ஆடி மற்றும் மாசி திருவிழா போன்ற விழாக்காலங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும்போது உற்சவங்களுக்கு முன்பு யானை ராமலட்சுமி கம்பீரமாக ரத வீதிகளில் வலம் வரும்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியில் புறப்பட்ட 5 வயது ‘சிவா’ என்ற ஆண் யானை நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு சுமார் 8 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரை உஜ்ஜினி மாகாளி அம்மன் கோவில் மேடையில் வந்திறங்கியது.
கோவிலுக்கு வந்த யானைக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் கிழக்கு ராஜகோபுரம் எதிரில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கோவில் இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் தீபாராதனை காண்பித்து பின் நாமகரண சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வரவேற்றனர்.
புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய யானையை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ராஜகோபுரத்தில் இருந்து பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் வழியாக கோவிலுக்குள் யானை அழைத்து செல்லப்பட்டு வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி போடப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறையின் உரிய தடையின்மைச் சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்க பட்ட பின்னரே இந்த யானை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


