வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரையில் இடைக்கால தடை விதித்துள்ளது.
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் திறப்பதனால் , பொது தொல்லை ஏற்படும் என , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, சிலை திறப்பு விழா தொடர்பில் தாம் மேலதிக புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதாகவும் , சிலை தொடர்பில் சட்டமா அதிபரிடமும் ஆலோசனை பெற வேண்டி இருப்பதாகவும் , அதனால் சிலையை திறக்க அனுமதிக்க கூடாது என மன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதேவேளை சிலை திறப்பு விழாவின் ஏற்பாட்டு குழு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , சிலை திறப்பு விழா பொது தொல்லையை ஏற்படுத்துவது இல்லை. சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அவர்களின் சிலையை திறக்கவுள்ளோம்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் எந்தவொரு முறைப்பாடும் இல்லாத நிலையில் பொலிஸார் தாமாக பொது தொல்லையை ஏற்படுத்துவதட்காக வழக்கு தொடர்ந்துள்ளனர் என சமர்ப்பணம் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மன்று சிலையை திறந்த பின்னர் , அகற்ற வேண்டியோ , உடைக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது பொருத்தமில்லை என்பதால், சிலையை திறக்க முதல் ஆராய்வதே பொருத்தமானது என மன்று கருதுவதாக குறிப்பிட்டு , சிலை திறப்பு விழாவிற்கு இடைக்கால தடை விதிப்பதாக கட்டளையிட்டு, குறித்த வழக்கினை எதிர்வரும் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளவுள்ளதாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.



