அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் துன்யாமலி (Ahmad Donyamali) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் உயர் தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் துன்யாமலி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன.
ஆசிய பிராந்தியத்தில் பலமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரான், இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்தையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, அமெரிக்காவில் நடைபெறவுள்ள போட்டிகளில் ஈரான் அணி விளையாடுவதை ட்ரம்ப் வரவேற்றதுடன் “ஈரான் அணி அமெரிக்காவுக்கு வந்து விளையாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
